அகில இலங்கை தமிழ் மொழித் தினப் போட்டிகளின் கிழக்கு மாகாணத்திற்கான அரங்கப் போடடிகள், நாளை (26) செவ்வாய்க்கிழமை திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் நடைபெறவுள்ளது. மாகாணக்கல்விப் பணிப்பாளர் அ.கனகசூரியம் தலைமையில் காலை 8.30 மணிக்கு ஆரம்ப நிகழ்வு இடம்பெற்று, அதனைத் தெடர்ந்து மாகாண மட்ட அரங்கப் போட்டிகள் நடைபெறவுள்ளன.அம்பாறை,
மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர்.
வாசிப்பு, ஆக்கத்திறன் வெளிப்பாடு, பேச்சு, பாவோதல், இலக்கிய விமர்சனம், அறிவிப்பாளர்,இசையும் அசையும், இசை-தனி, இசைகுழு-, நடனம் தனி, நடனம்-குழு, நாட்டிய நாடகம்,நாட்டார் பாடல், இலக்கிய நாடகம், வில்லுப்பாட்டு, விவாதம், தமிழறிவு வினாவிடை, முஸ்லிம் நிகழ்ச்சி, இலக்கிய நாடகம், நவீன நாட்டுக்கூத்து ஆகிய நிகழ்வுகள் அன்றைய தினம் நடை பெறவுள்ளன. திருகோணமலையில் நடைபெறவுள்ள இப்போட்டி நிகழ்வுகளுக்கு வெளி மாவட்டங்களிலிலிருந்து வருகை தரும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தங்குமிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மாகாண கல்வித் திணைக்களம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. ஆண்களுக்கு புனித சூசையப்பர் கல்லூரியிலும் பெண்களுக்கு புனித மரியாள் கல்லூரியிலும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.அகில இலங்கை தமிழ் மொழித் தின தேசிய மட்டப் போட்டிகள் ஒக்டோபர் (28) கொழும்பில் இடம்பெறவுள்ளது.