உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக்குச் செல்ல வேண்டிய தேவை எமக்கில்லை என்று கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
நீதியை நிலைநாட்டுவதற்கு சர்வதேச விசாரணை ஒன்றே வழி என்று வலியுறுத்தி வந்த அவர் திடீரென இப்படி தலைகீழாக மாற்றிப் பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம்பிலிப்பிட்டியவில் நேற்று நடைபெற்ற சென்-மைக்கல் ஆலயத்தின் பொன் விழாவில் பற்கேற்றதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உண்மைகளைக் கண்டறிவதற்கு நேர்மையான அதிகாரிகள் குழாம் ஊடாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட வேண்டும். குறிப்பாக அரசியல் அழுத்தங்களற்ற வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
அரசியல் தலைவர்கள் தமக்கு தேவையானவர்களை பாதுகாக்காது. வெளிப்படைத்தன்மையுடன் உண்மைகளை கண்டறிவதை நோக்கமாகக் கொண்டு குற்றவாளிகளை வெளிப்படுத்தவதற்காக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.
இந்தச் செயற்பாட்டில் எந்த விதமான அழுத்தங்களையும் பிரயோகிக்காது முறையான முயற்சிகளை முன்னெடுக்கின்ற போது எமக்கு சர்வதேச விசாரணைக்கு செல்ல வேண்டிய தேவை கிடையாது -என்றார்.
முன்னதாக. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி உள்நாட்டில் கிடைக்காத காரணத்தால் சர்வதேச விசாரணையே நடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வந்தார்.
அதேசமயம் சில தினங்களுக்கு முன்பு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு சர்வதேச விசாரணை வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.