மட்டக்களப்பு மாவட்டத்தில் பருவமழை பெய்ய ஆரம்பித்து இருப்பதால் டெங்கு நோய் தீவிரமாக பரவும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஜி.சுகுணனின் பணிப்புரையின் பேரில் மட்டக்களப்பு பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி மருத்துவர் திருமதி லதாகரனின் வழிகாட்டலில் நேற்று காலை கோட்டைமுனை பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந் நடவடிக்கையின் போது ஆறு பிரிவுகளாக சுகாதார பகுதியினர் பிரிக்கப்பட்டு 168 வீடுகளில் டெங்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. டெங்கு பரவும் இடங்களாக வைத்திருந்த இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் தேவையற்ற பொருட்கள் அகற்றப்பட்டு மட்டக்களப்பு மாநகர சபை சுத்திகரிப்பு தொழிலாளர்களால் அவைகள் அங்கிருந்து அகற்றப்பட்டன. இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு மட்டக்களப்பு மாநகர சபையின் சுகாதார பிரிவினரும் பங்கு கொண்டிருந்தனர்.