முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வெடிபொருட்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை தேடி தோண்டும் நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவலின் அடிப்படையில் இன்று (25) மாலை 2.30 மணியளவில் குறித்த பகுதியில் அகழ்வு பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் விடுதலைப் புலிகளால் பாரியளவிலான வெடி பொருட்கள் மற்றும் தங்கங்கள் முக்கிய பொருட்கள் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக குறித்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரகசிய தகவலின் அடிப்படையில் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையிலும் தொல்பொருள் திணைக்களம், கிராம சேவையாளர், சிறப்பு அதிரடிப்படையினர் பிரதேச செயலக அதிகாரிகள் ஆகியோரின் முன்னிலையிலும் இந்த அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.