ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் கட்சிகளுக்கிடையில் அட்டாளைச்சேனை பிரதேச சபை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கைகளின் அடிப்படையில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளராக தேசிய காங்கிரஸின் உறுப்பினர் எம்.எம். நிஹால் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான விசேட சபைக் கூட்டம் நேற்று (24) அட்டாளைச்சேனை பிரதேச சபை சபா மண்டபத்தில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.டி.எம். ராபி தலைமையில் நடைபெற்றது. இதில் தேசிய காங்கிரஸின் பிரதிநிதி சபை உறுப்பினர் எம்.எம். நிஹால் உதவித் தவிசாளர் பதவிக்கு ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை, கட்சியின் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி. சம்சல்தீன், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ், முன்னாள் உதவித் தவிசாளர் எப். நஜீத் உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள், ஏ.எல். அமானுல்லா, ஏ.சி. நியாஸ், ஏ.எல். பாயிஸ் (ADE), எஸ்.எம். றியாஸ், றியா மசூர், ஐ.எல். அஸ்வர், எம்.எல். றினாஸ், பி.எச்.ஜி. டி சில்வா, சட்டத்தரணி எம்.ஏ. அன்சில், ஐ.எல். சிராஜ், ஜே.எப். நஜா மற்றும் எப்.எப். மின்ஹா உள்ளிட்ட உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
அத்துடன் கிழக்கு மாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் என். ஐங்கரன், அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சாமர ஜெயதிலக்க, ஆர்.எம். நலீல் மற்றும் அம்பாறை உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தின் ஆய்வு உத்தியோகத்தர் எம்.எம்.எம். றிஸ்வி ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.







