முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம் மற்றும் ஆயுதங்களைத் தேடி மூன்றாவது நாளாக அகழ்வுப்பணிகள் இடம்பெற்று வருகின்றன.
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், தடயவியல் பொலிசார், இராணுவத்தினர், குறித்த பகுதிக்குரிய கிராம அலுவலர் உள்ளிட்டவர்களின் பங்கேற்புடன் இந்த மூன்றாவதுநாள் அகழ்வுப்பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால், மேற்கு பகுதியில் விடுதலைப்புலிகள் காலத்தில் தங்கம், ஆயுதம் உள்ளிட்ட பொருட்கள் புதைக்கப்பட்டுள்ளதாக பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, கடந்த (25)ஆம் திகதி திங்களன்று, குறித்த இடத்தில் அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
கடந்த (26)ஆம் திகதி நேற்றும் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந் நிலையில் அகழப்பட்ட குழியிலிருந்து நீர் ஊற்றெடுத்த காரணத்தினால், அகழ்வுப்பணிகள் இடை நிறுத்தப்பட்டு, நீர் இறைக்கும் மின் மோட்டார் இரண்டைப் பயன்படுத்தி குழியிலுள்ள நீரை அகற்றும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டதுடன், இரண்டு சிறிய கனகர இயந்திரங்களைப் பயன்படுத்தி அகழ்வுப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டன.
இவ்வாறான சூழலில் குறித்த அகழ்வுச் செயற்பாடுகள் மூன்றாவது நாளாக செப்ரெம்பர் (27) இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக காலையில் நீர் இறைக்கும் மின் மோட்டர்களைப் பயன்படுத்தி குழியில் ஊற்றெடுத்திருந்த நீர் அப்புறப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அத்தோடு குறித்த அகழ்வுப் பணிக்கு பெரிய கனகரக இயந்திரம் தேவை எனத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இன்று நண்பகல் (பெக்கோ) இயந்திரத்தை குறித்த இடத்திற்கு வரவளைத்து முன்றாவது நாள் அகழ்வுப்பணிகள் இடம்பெற்று வருகின்றன.
அத்தோடு (26)நேற்றைய இரண்டாம்நாள் அகழ்வின்போது, அகழ்விடத்திற்கு அருகேயிருந்த ஆலமரம் ஒன்று குழியினுள் வீழ்ந்த நிலையில் அந்த ஆலமரத்தை அப்புறப்படுத்தி அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும் இதுவரை இடம்பெற்ற அகழ்வுப் பணிகளில் எவ்வித ஆயுதங்களோ, தங்கங்களோ மீட்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.