சர்வதேச சைகைமொழி தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி ஒன்று இடம்பெற்றது.
இலங்கையின் 10 மாவட்டங்களிலிருந்து கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான சைகைமொழியாளர்களால் இந்த பேரணி இன்று (27.09.2023) முன்னெடுத்தனர்.
கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களமும் இலங்கை தமிழ் செவிப்புலவலுவற்றோர் அமைப்பும் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தது.
“செவிப்புலனற்றவர்கள் எங்கு வேண்டுமானாலும் சைகைமொழியை பயன்படுத்தக்கூடிய உலகம்” என்னும் தொனிப்பொருளில் இந்த சர்வதேச சைகைமொழி தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இதன்போது மட்டக்களப்பு ஞானசூரியம் சதுக்கத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்ட செவிப்புலவலுவற்றோர் சங்க அலுவலகத்திலிருந்து விழிப்புணர்வு பேரணியானது ஆரம்பமானது.
இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான சைகைமொழியாளர்கள் கலந்துகொண்டதுடன் ஊர்வலகத்தில் கலந்துகொண்டவர்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
குறித்த பேரணியானது மட்டக்களப்பு நகர் ஊடாக மட்டக்களப்பு மாநகரசபை மண்டபம் வரையில் நடைபெற்றதுடன் அங்கு விசேட நிகழ்வுகளும் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
இதேவேளை இன்றைய ஊர்வலத்தில் சமூக சேவைகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் அருள்மொழி உட்பட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.