சவூதி அரேபியாவில் இலங்கை பிரஜை சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படும் தகவல் தொடர்பில் கடும் அதிர்ச்சி தெரிவித்துள்ள மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம், அவரது உயிரைக் காப்பாற்ற அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
‘X’ தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், அடுத்த வாரம் இந்த விவகாரத்தைப் பாராளுமன்றத்தில் எழுப்பவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள சாணக்கியன், வெளிவிவகார அமைச்சு இவ்வழக்கைக் கையாண்ட விதம் மற்றும் மேன்முறையீட்டு நடைமுறை தொடர்பான தூதரக பொறுப்புணர்வு குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆரம்பத்தில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 30 இலட்சம் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்த அனோஜன், மேன்முறையீட்டின் பின்னர் மரண தண்டனை பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். வெற்றிபெறும் வாய்ப்பு “மிகவும் குறைவு” என தூதரகத்தின் சொந்த சட்ட மதிப்பீடு தெரிவித்திருந்தபோதிலும், வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவின் ஆலோசனையின் பேரிலேயே குடும்பத்தினர் மேன்முறையீட்டுடன் தொடர்ந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

குடும்பத்தினர் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பெயரில் இருந்த கணக்கிற்கு 18,90,766 ரூபாயை சட்டச் செலவுகளுக்காகச் செலுத்தியதாகவும், அவ்வாறு செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் சாணக்கியன் தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பிரிவின் ஆவணங்களின்படி, மேன்முறையீடு ஆகஸ்ட் 24, 2026 அன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், குடும்பத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்த போதிலும், அதை அவர்களுக்கு அனுப்பிய அமைச்சின் கடிதம் செப்டெம்பர் 16, 2026 அன்று தேதியிடப்பட்டிருந்தது.
கிழக்கு மாகாண மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீட்டில், சட்டத்தரணி அட்லான் அப்துல்லா அல்-சுபாயி என்பவரே பிரதிநிதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளார். எனினும், நீதிமன்றத்தில் வேறொரு சட்டத்தரணி ஆஜரானதாகவும், அவரது அடையாளம் அல்லது தொடர்புத் தகவல் குடும்பத்தினருக்கு ஒருபோதும் தெரிவிக்கப்படவில்லை எனவும் குடும்பத்தினர் கூறுவதாக அவர் தெரிவித்தார்.
நீதிமன்றத்தில் நிஜமாக ஆஜரான சட்டத்தரணியைத் தேர்வு செய்து பணிக்கு அமர்த்தியது யார்? பணம் எவ்வாறு விநியோகிக்கப்பட்டது? மேன்முறையீடு உரிய நேரத்தில் குடும்பத்தினருக்கு வழங்கப்படாததற்கான காரணம் என்ன? என அமைச்சின் பொறுப்புணர்வு தொடர்பாக சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலைமைகள் இவ்வழக்கின் தூதரக மற்றும் இராஜதந்திர கையாளுகையில் தவறுகள் இருக்கக்கூடும் என்ற கடுமையான கேள்விகளை எழுப்புவதாகவும், இதைப் பாராளுமன்றத்தில் தொடர்ந்து முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், பொறுப்புணர்வு விசாரணை உடனடி நடவடிக்கையைத் தாமதிக்கக் கூடாது என வலியுறுத்திய சாணக்கியன், “அனுபவமிக்க சுயாதீன சட்ட பிரதிநிதித்துவத்தை அரசாங்கம் உடனடியாக உறுதி செய்ய வேண்டும், மீதமுள்ள அனைத்து சட்ட வழிகள் மற்றும் மன்னிப்புச் செயல்முறைகளையும் பின்தொடர வேண்டும், சவூதி அரேபியாவில் உயர்மட்டத்தில் இராஜதந்திர பிரதிநிதித்துவங்களை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்ற சட்ட, தூதரக, இராஜதந்திர மற்றும் மனிதாபிமான வழிகள் அனைத்தையும் இப்போது பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்திய அவர், “ஒரு இலங்கைப் பிரஜையின் உயிர் அபாயத்தில் உள்ளது” எனக் குறிப்பிட்டார்.
வெளிவரும் தகவல்களின்படி, இறை நிந்தனை குற்றச்சாட்டின் பேரில் இலங்கை புலம்பெயர் தொழிலாளர் சிவராசா அனோஜனுக்கு சவூதி அரேபிய மேன்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், இது தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.








