பொதுமக்களுக்குச் சுமை சேர்க்கும் வகையில், தனியார் எரிபொருள் நிறுவனங்களின் கோரிக்கைகளுக்காக எரிபொருள் விலையை அரசாங்கம் உயர்த்தாது என்று எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
தங்களது ஒப்பந்த விதிமுறைகளின்படி, தனியார் நிறுவனங்கள் தங்களின் செலவுகளுக்கு ஏற்ப சொந்தமாக விற்பனை விலையைத் தீர்மானித்துக்கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் நிறுவனங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மட்டும் எரிபொருள் விலையை உயர்த்தி, பொதுமக்களை சிரமப்படுத்த அரசாங்கம் தயாராக இல்லை என்றும் அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அதேவேளை, தனியார் எரிபொருள் விநியோகஸ்தர்கள் தொடர்ந்து எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தினால், அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
தனியார் நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது மற்றும் விலை உயர்வு கோருவது குறித்த கவலைகளுக்கு மத்தியில்தான் அமைச்சரின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.







