கொழும்பு, பெஸ்டியன் மாவத்தை மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் (இ.போ.ச.) சொந்தமான பேருந்து ஒன்று திருடப்பட்டு, பின்னர் பேலியகொட பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியாவிலிருந்து நொச்சியாகம நோக்கி சேவையில் ஈடுபடும் குறித்த பேருந்து, மீண்டும் வவுனியாவுக்கு இயக்கப்படுவதற்காக நேற்று முன்தினம் அதிகாலை கொழும்பு பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதன்போது, பேருந்தின் சாவியை ஓர் இரகசிய இடத்தில் வைத்துவிட்டு சாரதி கீழே இறங்கியுள்ளார். பின்னர், பகல் நேர சேவைக்காக மற்றொரு சாரதி பேருந்தை இயக்குவதற்காக வந்தபோது, அது நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் காணப்படவில்லை.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் கொழும்பு மத்திய பேருந்து நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டதுடன், புறக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பேருந்தைத் தேடும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. எனினும், பேருந்தைக் கண்டுபிடிக்க முடியாததைத் தொடர்ந்து தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்நிலையில், பேலியகொட பகுதியில் உள்ள வீதியொன்றில் குறித்த பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மற்றொரு பேருந்தின் சாரதி தகவல் வழங்கியுள்ளார்.
அதன்பேரில் அங்கு சென்ற காவல்துறையினர், திருடப்பட்ட பேருந்தைக் கண்டுபிடித்துள்ளனர். இருப்பினும், பேருந்திலிருந்த டீசல் முழுவதும் அகற்றப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் புறக்கோட்டை காவல்துறையினரும் கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தின் விசாரணை அதிகாரிகளும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், கொழும்பு கைரேகைப் பதிவு அலுவலக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வருகை தந்து பேருந்தில் தடயங்களைச் சேகரித்துள்ளனர்.








