கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன்; நாடாளுமன்ற உறுப்பினர் இரா.அர்ச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஹரீஸ் உட்பட 6 பேருக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றில் ஆஜராகாத நா.உ.அருச்சுனா மற்றும் அஹமட் லெப்பை முகமது முத்தார், முகமது இப்ராஹிம், ஆகியோரை எதிர்வரும் நவம்பர் மாதம் 2ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் விஜயகுமார் இன்று திங்கட்கிழமை (12) உத்தரவிட்டார்
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் மீது அவதூறாக முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹபீப் முகமது முகமது ஹரீஸ், மௌலவி முஹமத் மிப்லால், உமர் லெப்பை மப்ரூப், அஹமட் லெப்பை முகமது முத்தார், முகமது இப்ராஹிம் மற்றும் யூடியூப், முகநூல் தளங்களுக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த மாதம் திங்கட்கிழமை( 21-9-2026) வழக்கு தாக்கல் செய்தார்.
இதனையடுத்து குறித்த 6 பேரும் வைத்தியர் சுகுணனுக்கு எதிராக முகநால் மற்றும் சழுக வலைத்தளங்களில் எழுதுவதற்கு கடந்த 28 ம் திகதி நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்து இன்று 12ம் திகதி எதிராளிகளை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்தது

இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணைக்காக இன்று திங்கட்கிழமை (12) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் வை.விஜயகுமார் விசாரணைக்கு எடுத்து கொண்டபோது இதில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஹரீஸ் ஹபீப் முகமது முகமது ஹரீஸ், மௌலவி முஹமத் மிப்லால், உமர் லெப்பை மப்ரூப், சிரேஷ்ட சட்டத்தரணி கியாஸ் ஹிஸ்புல்லா தலைமையில் சட்டத்தரணிகள் குழு ஆஜராகி இந்த வழக்கை ஏற்று விசாரித்து கட்டளையாகும் அதிகாரம் இந்த நீதிமன்றத்துக்கு இல்லை மற்றும் காரணம் காட்டுவது தொடர்பில் சமர்ப்பணம் செய்தனர்.
இதேவேளை வழக்காளி சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி லக்சான் டயஸ், மற்றும் கனகலிங்கம் கிசோபனா ஆஜராகிய சமர்பணம் முன்வைத்த நிலையில் குறித்த வழக்கிற்கு நீதிமன்றத்துக்கு சமூகமளிக்காத நாடாளுமன்ற உறுப்பினர் இரா.அர்ச்சுனா, அஹமட் லெப்பை முகமது முத்தார், முகமது இப்ராஹிம், ஆகியோரை எதிர்வரும் நவம்பர் 2 ம்திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு பதில் நீதவான் உத்தரவிட்டு வழக்கை அடுத்த தவணைக்கு ஒத்திவைத்தார்.
இதேவேளை குறித்த வழக்கு முஸ்லிம்களுக்கு எதிராக போடப்பட்ட வழக்கு அல்ல இது வழக்காளியான வைத்தியர் சுகுணன் மீது அவதூறாக முகநூல்களில் பதிவிட்டது தொடர்பாக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் போடப்பட்ட வழக்கு இதனை முஸ்லிம்களுக்கு எதிராக போடப்பட்டதாக தவறான விம்பத்தை காட்டி சமூக வலைதளங்களில் அரசியல் நோக்கங்களுக்காக பிழையாக பதிவிட்டுவிருகின்றனர் என சட்டத்தரணி கனகலிங்கம் கிசோபனா ஊடகங்களுக்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.








