இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையான பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்க கைது செய்யப்பட்டதையடுத்து, அவரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (12) பிற்பகல் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொஸ்பேட் ஏற்றுமதியுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு உரிமங்களைப் பெற்றுக்கொடுக்க உதவியமை மற்றும் முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் மூன்று நிறுவனங்களுக்கு மாத்திரம் ஏற்றுமதிக்கான ஏற்பாடுகளைச் செய்தமை தொடர்பில் அவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறித்த நிறுவனங்களிடமிருந்து 81 இலட்சம் ரூபாய் இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்த விசாரணைகளுக்காக இன்று ஆணைக்குழுவில் முன்னிலையான சாமர சம்பத் தசாநாயக்க, சுமார் மூன்று மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை, அவர் கைத்தொழில் இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் அவரது தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய சுமதிபால லியனாராச்சியும் இந்த விசாரணை தொடர்பில் முன்னதாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








