எயார்பஸ் விமானக் கொள்முதல் விவகாரத்தில் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை, எதிர்வரும் 27ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, ‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான நிதி முறைகேட்டுக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ, திடீர் மாரடைப்பு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, திறந்த இதய சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
எனினும், சத்திர சிகிச்சை தொடர்பான தகவல் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படவில்லை என அரச தரப்பு தெரிவித்ததையடுத்து, இது தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், எயார்பஸ் கொள்முதல் வழக்கை நிரந்தர நீதாய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரிக்கக் கோரி பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுக்க இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







