கலகொட அத்தே ஞானசார தேரரின் துறவற ஆடை தொடர்பான சர்ச்சை குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (13) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
ஞானசார தேரரின் துறவற ஆடை களையப்படும் காட்சியை அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் பார்வையிடுவதற்காக, சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தனது கைப்பேசி மூலம் நேரலையில் காண்பித்ததாக உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டை சாதாரணமாகக் கருத முடியாது எனத் தெரிவித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இது பாரதூரமான குற்றச்சாட்டு என்பதால் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்டார்.
சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் பொலிஸாரிடம் உத்தியோகபூர்வ முறைப்பாட்டைச் செய்த பின்னர், விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் உண்மையில் இடம்பெற்றதா, அது எவ்வாறு இடம்பெற்றது என்பன விசாரணைகளின் மூலம் கண்டறியப்படும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், உதய கம்மன்பில தனது குற்றச்சாட்டை உறுதிப்படுத்தக்கூடிய ஆதாரங்களை விசாரணையின்போது பொலிஸாரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.








