சிறையில் உள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி முன்னெடுக்கப்பட்ட நடைபயணத்திற்கு ஆதரவு தெரிவித்த ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை இலங்கை பொலிஸார் மறுத்துள்ளனர்.
கலகொடஅத்தே ஞானசார தேரரின் ஆதரவாளர் ஹெல்மெட்டால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் நபரின் காயங்களை தித்தகல்ல ஆனந்தசிறி தேரர் காட்டும் காணொளி சமூக வலைத்தளங்களில்வெளியானதை தொடர்ந்தே இந்தச் சம்பவம் தொடர்பான சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
அக்டோபர் 14ஆம் திகதி வீரகொட பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம், நடைபயணத்துடன் தொடர்புடையதல்ல என்றும், போக்குவரத்து நெரிசலின்போது ஏற்பட்ட தகராறே தாக்குதலுக்குக் காரணம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீதியவத்த தேவாலயத்திற்கு அருகில் லொறியில் பயணித்த நபருக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், ஹெல்மெட்டால் தாக்கும் அளவுக்குத் தீவிரமடைந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இருவரும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், காயமடைந்த நபரை நடைபயண ஆதரவாளர் எனச் சித்தரித்து சமூக வலைத்தளங்களில் காணொளி வெளியிடப்பட்டதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்பி பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்துவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.








