நாட்டில் இனவாதத்திற்கு இடமளிக்கப்படக் கூடாது என வலியுறுத்தியுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச, வடக்கில் தலைதூக்கும் தமிழ் இனவாதத்திற்கும் அரசாங்கம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் மற்றும் பொதுமக்களுக்கு இடையிலான உறவை விளக்கிய அவர், மக்கள் அரசாங்கத்தைப் பாதுகாப்பாக முன்னெடுத்துச் செல்லவும் முடியும், அதேவேளை அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவும் முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இனவாதத்திற்கு இடமில்லை என ஜனாதிபதி வடக்கிற்குச் சென்று தெரிவிக்கும் நிலையில், தமிழ் இனவாதமாகக் கருதப்படும் செயற்பாடுகளையும் அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும் என விமல் வீரவன்ச வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளில் மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்துகொள்வதைச் சுட்டிக்காட்டிய அவர், இவ்வாறான நிகழ்வுகள் இனவாதத்துடன் தொடர்புடையவையா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
இனவாதத்தைத் தடுப்பதாக இருந்தால், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அனைத்து தரப்பினரிடமிருந்தும் வெளிப்படும் இனவாதச் செயற்பாடுகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பௌத்த மக்களின் பொறுமையைச் சோதிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படக் கூடாது என எச்சரித்துள்ள விமல் வீரவன்சவின் இந்தக் கருத்துகள், இன நல்லிணக்கம், நினைவேந்தல் உரிமை மற்றும் அரசாங்கத்தின் இனக்கொள்கை தொடர்பான அரசியல் விவாதத்தை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளன.








