மட்டக்களப்பு மாவட்டத்தின் மைலத்தமடு பகுதியில் மேய்ச்சலுக்குச் சென்ற பசுக்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் திரும்பி வந்துள்ளதாகப் பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நேற்று (14) இரவு மேய்ச்சலுக்குச் சென்ற பசுக்கள், இன்று (15) காலை காயங்களுடன் திரும்பியதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மைலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு இதுவரை நிரந்தரத் தீர்வு காணப்படாத நிலையில், கால்நடை வளர்ப்பாளர்கள் தொடர்ந்தும் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
மூன்று நாட்களுக்கு முன்னர் மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் உள்ளிட்ட குழுவினர் அப்பகுதிக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்திருந்தனர்.
இந்நிலையில், மேய்ச்சல் தரைப் பகுதியில் சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமித்து விவசாயத்தில் ஈடுபடுவோரே தமது கால்நடைகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்வதாகப் பண்ணையாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அதிகாரிகள் நேரில் வந்து நிலைமைகளை ஆராய்ந்தும் தீர்வு கிடைக்காததால், கால்நடை வளர்ப்பை நம்பி வாழும் தமது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாகப் பண்ணையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.







