இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பான சரியான தகவல்களைப் பொதுமக்களுக்கு வழங்கவும், அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் அரசாங்கம் புதிய உத்தியோகபூர்வ இணையத்தளமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
Reform Information & Enquiry Service (RIES) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த இணையத்தளத்தை https://edureformfact.moe.gov.lk என்ற முகவரியில் அணுக முடியும்.
பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்புடன், நேற்று (14) அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் இந்த இணையத்தளம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது, அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெற்றது.
கல்வி மறுசீரமைப்பு என்பது பாடத்திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது மட்டுமல்ல, முழுக் கல்விக் கட்டமைப்பையும் மாற்றியமைக்கும் செயல்முறையாகும் எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
2026ஆம் ஆண்டு முதலாம் தரத்தில் கல்வி மறுசீரமைப்பின் முதற்கட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 2027ஆம் ஆண்டு ஆறாம் தரத்திற்கும் இதனை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதற்காக ஆசிரியர் பயிற்சி, உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், மாணவர்களின் கல்வியை அரசியல் மோதல்களுக்கான களமாக மாற்றாமல், மறுசீரமைப்புகள் தொடர்பில் சரியான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களுக்கு முக்கிய பங்கு உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே, கல்வி மறுசீரமைப்பு தொடர்பான பொதுமக்கள் விழிப்புணர்வு உபகுழுவின் இணைத் தலைவரான பேராசிரியர் பிரபாத் ஜயசிங்க கருத்துத் தெரிவிக்கையில், மனப்பாடக் கல்வி மற்றும் ஆசிரியர் மையக் கற்றல் முறையிலிருந்து விலகி, மாணவர் மையக் கற்றல் முறையை அறிமுகப்படுத்துவதே இந்த மறுசீரமைப்புகளின் நோக்கம் என்றார்.
அத்துடன், இறுதிப் பரீட்சைகளை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல், மாணவர்களின் பகுப்பாய்வு, படைப்பாற்றல் மற்றும் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன்களை மதிப்பிடும் தொடர்ச்சியான மதிப்பீட்டு முறைகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் இறுதியில், கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பாக ஊடகப் பிரதிநிதிகள், மூத்த ஊடகவியலாளர்கள் மற்றும் கல்வி நிபுணர்களுக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.







