மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலையை தடை செய்யுமாறும் சுருக்கு வலைக்கு உடந்தையாக இருக்கும் உத்தியோகத்தரை உடனடியாக இடமாற்றம் செய்ய கோரி மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை (16) காலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு இலஞ்ச ஒழிப்பு போதைப் பொருளுக்கு எதிரான அமைப்பின் ஏற்பாட்டினையடுத்து இன்று காலை 9.00 மணிக்கு கல்லடியில் உள்ள கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னால் மீனவர்கள் மற்றும் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள், மாதர் சங்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டவர்கள் ஒன்று திரண்டனர்.

இதன் போது தடை செய் தடை செய் சட்டவிரோத சுருக்கு வலையை தடை செய், அழிக்காதே அழிக்காதே மட்டக்களப்பு கடல்வளத்தை அழிக்காதே, சுருக்கு வலைக்கு உடந்தையாக இருக்கின்ற உத்தியோகத்தரை உடனடியாக இடமாற்றம் செய், வேண்டும் வேண்டும் இலஞ்சம் பெறாதா நேர்மையான உத்தியோகத்தர் மட்டக்களப்புக்கு, சட்டவிரோத சுருக்குவலை உரிமையாளர்களிடம் இலஞ்சம் பெறும் உத்தியோத்தர்களை பணி இடைநீக்கம் செய், காத்தான்குடி பாலமுனையிலும் ,பூனெச்சிமுனையிலும் சட்டவிரோத சுருக்குவலை மீன்பிடி தொழிலாளிகளான கிண்ணியாவைச் சேர்ந்த தொழிலாளர்களை வெளியேற்று, தடை செய்யப்பட்ட சுருக்கு வலையை உடனடியாக தடை செய், வெளிமாவட்ட சட்டவிரோத சுருக்குவலை தொழிலாளர்களை அனுமதிக்காதே, ஏழை மீனவர்களின் வயிற்றில் அடிக்காதே போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு கோஷம் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள பணிப்பாளரிடம் மகஜர் ஒன்றை கையளித்த பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் 11.00 மணியளவில் அங்கிருந்து வெளியேறிச் சென்றனர்.







