காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள 119 குடும்பத்தினரை, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP) இன்று (16) கல்முனைக்கு அழைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறும் இவ்விசாரணையின்போது, 1990ஆம் ஆண்டு வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட தனது கணவரை 36 ஆண்டுகளாகத் தேடி வருவதாகப் பெண்ணொருவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த OMP ஆணையாளர் சட்டத்தரணி வடிவேல் கிருஷ்ணமூர்த்தி, ஆரம்பத்தில் சுமார் 25,000 பேரைக் கொண்டிருந்த பட்டியல், இரட்டைப் பதிவுகள் உள்ளிட்டவற்றைச் சரிபார்த்த பின்னர் தற்போது 17,000 பேராகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார். இவர்களில் சுமார் 11,000 பேர் தொடர்பில் முதற்கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக இரண்டு இலட்சம் ரூபாய் வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், காணாமல் போனவர்களின் குடும்பங்களிடமிருந்து மூல ஆவணங்களைச் சேகரிக்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுத்த OMP, சான்றுபடுத்தப்பட்ட பிரதிகள் அல்லது நிழற்படப் பிரதிகளை மட்டுமே வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
நேற்று (15) ஆரம்பமான இந்தச் சந்திப்புகள் இன்று (16) வரை இரண்டு நாட்களாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








