அதிகமாகப் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதற்கும், மூளையின் இரத்த நாளங்கள் தொடர்பான காயங்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகக் கனடாவில் நடத்தப்பட்ட புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
JAMA Network Open மருத்துவ ஆய்விதழில் ஒக்டோபர் 15ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், 35 முதல் 69 வயதுக்குட்பட்ட 8,783 பேர் பங்கேற்றனர்.
உருளைக்கிழங்கு சிப்ஸ், சர்க்கரை சேர்க்கப்பட்ட காலை உணவுத் தானியங்கள், உடனடியாகச் சாப்பிடக்கூடிய உணவுகள் உள்ளிட்ட அதிகப் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உட்கொண்டவர்களுக்கு, எம்.ஆர்.ஐ. பரிசோதனையில் மூளைக் காயங்கள் கண்டறியப்படுவதற்கான வாய்ப்பு ஒப்பீட்டளவில் 40 சதவீதம் அதிகமாக இருந்தது.
இத்தகைய மூளைக் காயங்கள் எதிர்காலத்தில் பக்கவாதம் ஏற்படுவதற்கான ஆபத்துடன் தொடர்புடையவையாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனினும், அதிகப் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கும் மூளைக் காயங்களுக்கும் இடையிலான நேரடித் தொடர்பை இந்த ஆய்வு நிரூபிக்கவில்லை. இதனை உறுதிப்படுத்த மேலதிக நீண்டகால ஆய்வுகள் தேவைப்படுகின்றன.







