சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அரசாங்கத்தின் ஆணைக்கு முரணாக அவரை விடுதலை செய்யும் தீர்மானத்தை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவோ அல்லது அரசாங்கமோ எடுக்காது என அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை (16) ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்துவதுமே அரசாங்கத்தின் ஆணை எனக் குறிப்பிட்டார்.
ஞானசார தேரருக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என பௌத்த பிக்குகள் குழுவொன்று முன்வைத்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என்றும், அவ்வாறு செய்வது அரசாங்கத்தின் ஆணையை மீறுவதாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
எந்தச் சூழ்நிலையிலும் அரசாங்கத்தின் ஆணைக்கு எதிராகச் செயற்பட முடியாது எனக் குறிப்பிட்ட அமைச்சர், நிறைவேற்றக்கூடிய கோரிக்கைகளையே முன்வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் கூடாரங்களை அமைத்துப் போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குகள் குழுவினர், வெள்ளிக்கிழமை (16) நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கூடாரங்களை அகற்றிவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.







