போர்த்துக்கேயர்களால் பௌத்த சாசனத்திற்கு ஏற்படுத்தப்பட்ட அழிவைவிடப் பாரிய அழிவை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஏற்படுத்தி வருவதாக உலப்பனே சுமங்கல தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் நேற்று (16) ‘காவி உடைக்கு நீதி’ என்ற தொனிப்பொருளில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு, அதிகாரிகளின் தொழில்நுட்பத் தவறைக் காரணமாகக் காட்டி இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதிகாரிகளின் தவறுக்காக ஞானசார தேரர் தண்டனை அனுபவிப்பது அநீதி எனத் தெரிவித்தார்.
மேலும், பௌத்த சாசனத்தின் மீதான பகையைத் தீர்த்துக்கொள்வதற்காக ஞானசார தேரர் பலிக்கடாவாக்கப்பட்டுள்ளதாகவும், பௌத்த பிக்குகளின் காவி உடைக்கு ஏற்பட்ட அவமதிப்புக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
விரைவில் பெலவத்தைக்கும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் உலப்பனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.








