தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரும், ‘தேனிசைத் தென்றல்’ என இரசிகர்களால் அழைக்கப்படுபவருமான தேவா தனது 75ஆவது வயதில் காலமானார். அவரது மறைவு திரையுலகினரையும் இரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று (17) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
1989ஆம் ஆண்டு வெளியான ‘மனசுக்கேத்த மகாராசா’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான தேவா, 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’ உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களுக்குப் பாடல்களையும் பின்னணி இசையையும் வழங்கிய அவர், தமிழ் திரையிசையில் தனக்கெனத் தனித்துவமான இடத்தைப் பிடித்தார்.
குறிப்பாக, கானா பாடல்களைத் தமிழ் திரையுலகின் பிரதான இசை வடிவங்களில் ஒன்றாகப் பிரபலப்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய தேவாவின் இசைப் பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும்.








