சுகாதார உதவியாளர்களின் சீருடை விதிமுறைகள் தொடர்பில், தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை சுகாதார அமைச்சருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அண்மைய பரிந்துரைகளைத் தொடர்ந்து இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகப் பேரவை தெரிவித்துள்ளது.
சுகாதாரப் பணியாளர்களின் கலாசார மற்றும் மத உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதுடன், தொழில்சார் தரநிலைகள் மற்றும் நோயாளர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் எனப் பேரவை வலியுறுத்தியுள்ளது. அத்துடன், தேவையற்ற இன மற்றும் மத ரீதியான பதற்றங்களைத் தவிர்ப்பதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டியுள்ளது.

பாராளுமன்றத்தில் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விடுத்த அழைப்பிற்கு அமைய, சீருடை விவகாரத்தை ஆராய்வதற்காக அறிவிக்கப்பட்ட குழுவின் நியமனம், அதன் செயற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் தற்போதைய சீருடை விதிமுறைகளை மீளாய்வு செய்வதற்கான காலவரையறை குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் நியாயமானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான தீர்வொன்றை எட்டுவதற்குத் தமது ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகப் பேரவை தெரிவித்துள்ளது.
அதேவேளை, இவ்விடயம் தொடர்பான கொள்கை ரீதியான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடமே உள்ளதாகவும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.








