வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரச திணைக்களங்கள் இரண்டின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தனியார் காணிகள் உள்ளிட்ட சுமார் இரண்டு இலட்சம் ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான முன்மொழிவுகள் விரைவில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் வனவளத் திணைக்களம், வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றின் கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், அபிவிருத்திப் பணிகளில் நிலவும் தடைகள் மற்றும் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக, பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடியின் பங்கேற்புடன் ஒக்டோபர் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே சுற்றுச்சூழல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க படபெந்தி இதனைத் தெரிவித்துள்ளார்.
2012ஆம் ஆண்டு வனவளத் திணைக்களம் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட காணிகளில் மக்களின் குடியிருப்புகள் மற்றும் வாழ்வாதாரத்திற்காகப் பயன்படுத்தப்படும் காணிகளும் உள்ளடங்கியுள்ளதாக சுட்டிக்காட்டிய, இந்தக் கலந்துரையாடலில் ஆரம்ப உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், இதனைத் தமக்கு இழைக்கப்பட்ட அநீதியாக மக்கள் கருதுவதாகவும் தெரிவித்ததாக வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது.
1984 ஆம் ஆண்டளவில் தமது சொந்தப் பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்த மக்களால் இன்றுவரை தமது காணிகளுக்குத் திரும்ப முடியாத நிலைமை தொடர்வதாகவும், இந்தக் காணிப் பிரச்சினைகள் காரணமாக அபிவிருத்தி மற்றும் புனரமைப்புப் பணிகளை முன்னெடுப்பதிலும் பெரும் தடைகள் நிலவுவதாகவும் ஆளுநர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழுவுக்கு மாவட்டச் செயலகங்கள் பரிந்துரைத்துள்ள காணிகளையாவது விரைவாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்ததாக வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.

2012ஆம் ஆண்டு புவியியல் அமைவிடக் குறியீட்டுத் தொழில்நுட்பத்தை (GPS) பயன்படுத்தி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெருமளவிலான காணிகள் வனவளத் திணைக்களம் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதாக, இந்தக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த சுற்றுச்சூழல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க படபெந்தி குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்தக் காணிகளில் மருத்துவமனைகள், அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகள் மற்றும் தனியார் காணிகளும் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலும் சுற்றுச்சூழல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க படபெந்தி இதனை மீண்டும் உறுதிப்படுத்தியிருந்தார்.
“2010ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இருந்து வனவளத் திணைக்களம் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்களங்களின் கீழ் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகள் GPS-இன் அடிப்படையில் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த GPS-இன் அடிப்படையில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை அடையாளம் கண்டபோது, சில அரச அலுவலகங்கள், மருத்துவமனைகள், தனியார் காணிகள் போன்றவையும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. எனவே, முதற்கட்டமாக இந்தப் பகுதிகளை அடையாளம் கண்டு அவற்றை விடுவிப்பதற்காக அமைச்சரவை அனுமதியுடன் குழுவொன்று நியமிக்கப்பட்டது. அந்தக் குழுவின் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.”
இந்தக் காணிகளை அடையாளம் கண்டு விடுவிப்பதற்காக 2025ஆம் ஆண்டு அமைச்சரவையின் அனுமதியுடன் குழுவொன்று நியமிக்கப்பட்டதாகவும், அந்தக் குழுவுக்கு ஆறு மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தபோதிலும், ஓராண்டு கடந்தும் இறுதி அறிக்கை அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டதாக வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில அதிகாரிகளிடமிருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்காததால் இந்தச் செயன்முறையை நிறைவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் சுற்றுச்சூழல் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆய்வுகள் நிறைவடைந்து விடுவிப்பதற்குப் பரிந்துரைக்கப்பட்ட காணிகளைக்கூட இதுவரை விடுவிக்க முடியாத நிலைமை காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து சுமார் இரண்டு இலட்சம் ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான பரிந்துரைகளை விரைவில் அமைச்சரவைக்குச் சமர்ப்பித்து, அதன் அனுமதியுடன் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்ததாக வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் கால்நடைகளுக்குத் தேவையான மேய்ச்சல் நிலங்களையும் விடுவிக்கப்பட வேண்டிய காணிகளில் அடையாளம் காண வேண்டும் என அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.
அரச படைகளுக்கு மேலதிகமாக, தொல்பொருள் திணைக்களம், வனவளத் திணைக்களம், வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை உள்ளிட்ட பல அரச நிறுவனங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் காணிகளை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி வருகின்றன.








