பெருந்தொகையான கேரள கஞ்சாவுடன் புத்தளம் நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்துக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், புத்தளம், தில்லையடிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தில்லையடிப் பகுதியிலிருந்து புத்தளம் நகரத்தை நோக்கி சந்தேகநபர் மோட்டார் சைக்கிளில் கேரள கஞ்சாவைக் கடத்திச் செல்வதாகக் கிடைத்த தகவலையடுத்து, குறித்த மோட்டார் சைக்கிளை இடைமறித்துச் சோதனையிட்டபோதே அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகை கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளுடன் சந்தேகநபர் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








