யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் இன்று (19) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, மாவட்ட செயலகப் பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
நடைபெற்று முடிந்த பரீட்சை மற்றும் அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட நேர்முகத் தேர்வுக்கான பெயர்ப்பட்டியல் தொடர்பில் வேலையற்ற பட்டதாரிகளின் அடிப்படை உரிமைகள் முழுமையாக மீறப்பட்டுள்ளதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக, குறித்த பெயர்ப்பட்டியல் எந்த அடிப்படையில் வெளியிடப்பட்டது என்பது தொடர்பில் தாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், அரச சேவையில் ஏற்கனவே உள்ள பட்டதாரிகள் பாடவாரியாகவும் மாகாண வாரியாகவும் அதிகளவில் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இந்நடவடிக்கை வேலையற்ற பட்டதாரிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
எனவே, பரீட்சைப் புள்ளிகள் வழங்கப்பட்ட முறைமை நியாயமானதாக இருக்க வேண்டும் என்பதுடன், அரச சேவையில் உள்ள பட்டதாரிகளுக்கும் வேலையற்ற பட்டதாரிகளுக்கும் தலா 50 சதவீதம் என்ற விகிதத்தில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இவ்விடயம் தொடர்பில் நியாயமானதும் சட்டரீதியானதுமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வடக்கு மாகாணம் தழுவிய வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் முயற்சித்து வருவதாகவும், இதன் ஒரு பகுதியாகவே இன்றைய கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.








