‘ஓரியோனிட்ஸ்’ (Orionids) விண்கல் மழையை இலங்கையர்களும் இரவு வானில் அவதானிக்க முடியும் என மொரட்டுவை ஆர்தர் சி. கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதத்தில் தோன்றும் இந்த விண்கல் மழையை, இம்முறை ஒக்டோபர் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் தெளிவாகக் காண முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகப் புகழ்பெற்ற ஹாலியின் வால்வெள்ளி சூரியக் குடும்பத்தைக் கடந்து செல்லும்போது விட்டுச் செல்லும் தூசித் துகள்கள் மற்றும் சிறிய பாறைத் துகள்கள் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து எரிவதன் காரணமாகவே இந்த விண்கல் மழை உருவாகிறது.
இந்தத் துகள்கள் மணிக்கு அல்ல, நொடிக்கு சுமார் 66 கிலோமீற்றர் வேகத்தில் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைவதால், இரவு வானில் வேகமாகச் செல்லும் ஒளிக்கீற்றுகளாகத் தென்படுகின்றன.
மேகமற்ற தெளிவான வானில், நள்ளிரவுக்குப் பின்னரும் குறிப்பாக அதிகாலை நேரத்துக்கு அண்மையிலும் இந்த விண்கல் மழையைச் சிறப்பாக அவதானிக்க முடியும்.
இதனைப் பார்ப்பதற்குத் தொலைநோக்கியோ அல்லது வேறு விசேட உபகரணங்களோ தேவையில்லை. வெறும் கண்களால் கிழக்கு வானில் உள்ள ‘ஓரியன்’ (Orion) நட்சத்திரக் கூட்டத்தைச் சுற்றியுள்ள பகுதியை நோக்கி அவதானிக்க முடியும்.








