போர்த்துக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 30 நாட்கள் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நோர்வே அணிக்கு எதிரான போட்டியில் மாற்று வீரராக அமர்த்தப்பட்ட ரொனால்டோ, எதிர்பார்த்தபடி களமிறக்கப்படாததால் அதிருப்தியடைந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, டென்மார்க் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக கோபன்ஹேகனில் அமைந்திருந்த போர்த்துக்கல் அணியின் பயிற்சி முகாமிலிருந்து அவர் வெளியேறியுள்ளார்.
போர்த்துக்கல் கால்பந்து கூட்டமைப்பின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு, தேசிய அணியின் முகாமிலிருந்து அனுமதியின்றி வெளியேறியமை விதிமீறல் எனத் தீர்மானித்து, 30 நாட்கள் தடையையும் 255 யூரோ அபராதத்தையும் விதித்துள்ளது. இது விதிமுறைகளின் கீழ் விதிக்கக்கூடிய குறைந்தபட்சத் தண்டனையாகும்.
தனது செயலுக்காக இரசிகர்களிடமும் சக வீரர்களிடமும் ரொனால்டோ மன்னிப்புக் கோரியதுடன், விதிக்கப்படும் தண்டனையை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே தடை காலத்தின் ஒரு பகுதியை அவர் நிறைவு செய்துள்ளதால், நவம்பர் மாதம் நடைபெறவுள்ள டென்மார்க் மற்றும் வேல்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், அணிக்குத் திரும்புவது தொடர்பான இறுதி முடிவு உறுதிப்படுத்தப்படவில்லை.








