சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நேற்று (20) விசேட வழிபாட்டுச் சடங்கு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
சமந்தபத்ர தேரரின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், மாத்தறையிலிருந்து வரவழைக்கப்பட்ட மாந்திரீகர்களின் பங்கேற்புடன் “மஹசோன் பிதேனிய” எனப்படும் விசேட சடங்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்கும் மக்களுக்கும் தீங்கு விளைவிப்பதாகக் கருதப்படும் சக்திகளை அகற்றி, நாட்டில் நீதி மற்றும் நியாயத்தை நிலைநாட்டுவதே இந்தச் சடங்கின் நோக்கம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நாட்டை அராஜக நிலையிலிருந்து மீட்டெடுக்கும் நோக்கில் இயற்கையின் சக்தியிடம் நாட்டை ஒப்படைக்கும் வழிபாட்டு நிகழ்வாகவும் இது ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கிலும், அநீதியானவர்கள் எனக் கருதப்படுபவர்களை இலக்காகக் கொண்டும் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வில், பௌத்த பிக்குகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் ஜனாதிபதிக்கே தேரர்கள் சூனியம் வைத்துள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.












