யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் புதிதாக மதுபானசாலைகளைத் திறக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கும் மக்களின் நலன்களுக்கும் அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (21) நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்விகளை எழுப்பிய அவர், 2024ஆம் ஆண்டு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் 361 மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான விபரங்கள், அவற்றைப் பரிந்துரைத்த அரசியல்வாதிகளின் பெயர்கள் மற்றும் இரத்துச் செய்யப்பட்ட அனுமதிப்பத்திரங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் எனக் கோரினார்.
மேலும், மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனையைக் கட்டுப்படுத்துவதுடன், குற்றவாளிகளுக்கான தண்டனைகளை அதிகரிக்கவும் வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்த பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, மதுவரிக் கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு தண்டனைகளை அதிகரிப்பதற்கான சட்ட வரைபுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.







