மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
நேற்றிரவு இடம்பெற்ற வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந்த சுற்றிவளைப்பில், ஐந்து சந்தேகநபர்களிடமிருந்து 32 கிராம் 780 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், இருவரிடமிருந்து 4 கிராம் 840 மில்லிகிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் நாவலடி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பூட்சிட்டி உரிமையாளர் ஒருவர், மொத்தமாகப் போதைப்பொருட்களை விநியோகித்ததாகச் சந்தேகிக்கப்படுகிறார்.
ஏழு சந்தேகநபர்களும் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், சந்தேகிக்கப்படும் மொத்த வியாபாரியைத் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டதுடன், ஏனைய ஆறு பேரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.








