சவூதி அரேபியாவின் தம்மாமில் அமைந்துள்ள கிங் பஹத் சர்வதேச விமான நிலையத்தின் மீது நேற்று (21) நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர். சவூதி சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது.
தாக்குதலால் விமான நிலையத்துக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பது தொடர்பில் சவூதி அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீதான சந்தேகம் நிலவுகின்றது.
இதேவேளை, பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்திற்கொண்டு, சவூதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அத்தியாவசியமற்ற பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை வெளியேறுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியம், ஜோர்தான், கட்டார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளிலுள்ள அமெரிக்கத் தூதரகப் பணியாளர்களின் குடும்பத்தினரும் வெளியேற்றப்படுவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், இந்த நான்கு நாடுகளிலும் வெளியேற்ற உத்தரவு தொடர்பான தகவல்கள் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தால் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.








