தேசிய மக்கள் சக்தி ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்தாலும், நாட்டின் ஒட்டுமொத்த அரச இயந்திரமும் இன்னும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு முழுமையாக இணங்கிச் செயற்படவில்லை என விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.
அரச சேவை பொறியியலாளர் சங்கத்தின் வருடாந்தக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமையை முழுமையான “எமது அரசு” எனக் குறிப்பிட முடியாது என்றும், இது “எமது ஆட்சி” மட்டுமே என்றும் தெரிவித்த அவர், பல தசாப்தங்களாக அரச நிர்வாகக் கட்டமைப்பில் வேரூன்றியுள்ள பலவீனங்களும் முறைகேடுகளும் தொடர்ந்தும் காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.
அரச நிர்வாகக் கட்டமைப்பை முழுமையாகச் சீரமைத்து, அதனைச் சரியான பாதையில் வழிநடத்துவதற்குக் கணிசமான காலம் தேவைப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் சில தரப்பினர், அரச கட்டமைப்பைச் சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
நாட்டின் அபிவிருத்திக்காக வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்படும் நிதியை மக்களின் நலனுக்காக முறையாகப் பயன்படுத்த முடியாமை, அரசாங்கம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்றாக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்ட போதிலும், பல அரச திணைக்களங்களாலும் நிறுவனங்களாலும் அந்த நிதியில் 60 முதல் 70 சதவீதம் வரையிலான தொகையையே பயன்படுத்த முடிவதாகக் குறிப்பிட்டார்.
சில நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கப்படும்போது, அதனைப் பயன்படுத்துவதற்கான இயலுமை தங்களிடம் இல்லை எனக் கூறி, நிதியைப் பெற்றுக்கொள்ள மறுக்கும் நிலையும் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதி மக்களைச் சென்றடைவதுடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்க வேண்டும். எனினும், நிதி ஒதுக்கீடுகள் இருந்தும் அவற்றை உரிய முறையில் பயன்படுத்த முடியாத அளவுக்கு அரச கட்டமைப்பு பலவீனமடைந்துள்ளதாகவும், சில நிறுவனங்கள் செயற்திறனற்ற நிலையை எதிர்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில், பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து பெருமளவிலான தொழில்சார் நிபுணர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள போதிலும், பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அரச சேவையில் தொடர்ந்து பணியாற்றும் பொறியியலாளர்களின் அர்ப்பணிப்பையும் அமைச்சர் பாராட்டினார்.
தொழில்சார் நிபுணர்களில் சுமார் 60 சதவீதமானோர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதன் காரணமாக அரச சேவையில் பாரிய மனிதவளப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அரச நிறுவனங்களின் கட்டமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளில் குறைபாடுகள் காணப்பட்டாலும், ஒதுக்கப்படும் நிதியை அதிகபட்ச வினைத்திறனுடன் பயன்படுத்தி, அபிவிருத்தித் திட்டங்களை விரைவாக நிறைவு செய்வதற்கு பொறியியலாளர்கள் முன்னின்று செயற்பட வேண்டும் என்றும் அமைச்சர் கே.டி. லால் காந்த வலியுறுத்தினார்.








