விலங்குகளைப் பாதிக்கும் ஷமொண்டா (Shamonda) வைரஸ், உலகில் முதன்முறையாக மனிதர் ஒருவரிடம் கண்டறியப்பட்டுள்ளதாக பிரான்ஸ் சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர். குறித்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நோயாளர் ஒக்டோபர் மாத முற்பகுதியில் உயிரிழந்துள்ளார்.
கடுமையான நோயெதிர்ப்புக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த நோயாளர், பிரான்ஸின் லியோன் (Lyon) நகரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். எனினும், அவரது மரணத்துக்கு வைரஸ் தொற்று நேரடியாகக் காரணமா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
1960களின் நடுப்பகுதியில் நைஜீரியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட இந்த வைரஸ், இதுவரை ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் விலங்குகளிடையே பரவியிருந்தது. குறிப்பாக மாடுகளைப் பாதிக்கும் இந்த வைரஸ், பாதிக்கப்பட்ட சிறிய இரத்தம் உறிஞ்சும் பூச்சிகளின் கடி மூலம் பரவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் ஐரோப்பிய நாடுகளிலும் விலங்குகளிடையே இந்த வைரஸ் கண்டறியப்பட்டிருந்தது. மனிதர்களுக்குத் தொற்றக்கூடியதாக இதுவரை கருதப்படாத நிலையில், தற்போது பிரான்ஸில் முதல் மனிதத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த நோயாளர், கிழக்கு பிரான்ஸ் பகுதியில் வைரஸ் பரவியிருந்த காலப்பகுதியில் பூச்சிக்கடியின் மூலம் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். எனினும், தொற்று ஏற்பட்ட விதம் தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன.
இந்நிலையில், தற்போதைய அறிவியல் தகவல்களின் அடிப்படையில் பொதுமக்களுக்கு சுகாதார அச்சுறுத்தல் எதுவும் அடையாளம் காணப்படவில்லை என பிரான்ஸ் அதிகாரிகளும் உலக சுகாதார ஸ்தாபனமும் தெரிவித்துள்ளன. மேலும், இந்தத் தொற்று தனிப்பட்ட சம்பவமாக இருக்கலாம் என்றும், பரவலான மனிதத் தொற்றாக மாறுவதற்கான சாத்தியம் குறைவு என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மனித, விலங்கு மற்றும் சுற்றுச்சூழல் சுகாதார நிபுணர்கள் மேலதிக ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றனர். உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் ஐரோப்பிய நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையம் ஆகியவற்றுக்கும் இந்தச் சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.







