முன்பள்ளிக் குழந்தைகளுக்கு பாடம் சார்ந்த தனிப்பயிற்சி வகுப்புகளை நடத்துவது சட்டவிரோதமானது என ஆரம்ப சிறுவர் மேம்பாட்டு அதிகாரசபையின் பணிப்பாளர் எச்.எம். வசந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
மொனராகலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்பள்ளிப் பருவம் என்பது குழந்தைகளின் ஆரம்பகால வளர்ச்சிக்கு முக்கியமான காலப்பகுதி என்பதால், அந்த வயதில் பாடம் சார்ந்த தனிப்பயிற்சிகள் மூலம் குழந்தைகளுக்கு அதிகப்படியான கல்விச் சுமையை ஏற்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், புதிய முன்பள்ளிகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது எனக் குறிப்பிட்ட அவர், இதன் அடிப்படையில் செவனகல பகுதியில் இயங்கி வந்த முன்பள்ளியொன்று மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வெளிநாடுகளில் தொழில்புரியும் பெற்றோரின் குழந்தைகளின் நலன் மற்றும் மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சினால் விசேட அபிவிருத்தித் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.








