ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தொடர்பான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஒரே நாளில் ஏழு எண்ணெய் கப்பல்கள் சேதமடைந்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரான் புரட்சிகர இராணுவம் வெளியிட்ட தகவலின்படி, குறித்த கப்பல்களில் நான்கு கப்பல்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், ஏனைய மூன்று கப்பல்கள் கடல் கண்ணிவெடிகளில் சிக்கிச் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
எனினும், சேதமடைந்த கப்பல்கள் எந்தெந்த நாடுகளுக்குச் சொந்தமானவை என்பது குறித்தோ, இந்தச் சம்பவங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளனவா என்பது குறித்தோ இதுவரை தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.
இதேவேளை, ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய்க் கப்பல்கள் பயணிக்க அமெரிக்கா அனுமதித்தால், வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்காவின் இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையில் இடம்பெறும் இச்சம்பவங்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன.
ஈரான் வெளியிட்டுள்ள தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டால், ஈரானுக்கு எதிரான போர் ஆரம்பித்ததிலிருந்து ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான எண்ணெய்க் கப்பல்கள் சேதமடைந்த சம்பவமாக இது அமையக்கூடும்.
எனினும், குறித்த சம்பவங்கள் தொடர்பான மேலதிக சுயாதீன உறுதிப்படுத்தல்கள் வெளியாகும் வரை, ஈரான் தரப்பில் வெளியிடப்பட்ட தகவல்களாகவே இவற்றைக் கருத வேண்டும்.








