இலங்கையில் 34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் நடைபெற்ற அரசாங்க நில அளவையாளர் திணைக்கள சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த நிறுவனங்களை மூடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் சில அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் திறனைக் கொண்டிருந்தாலும், வெளிநாடுகளிலிருந்து ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்கும் அளவுக்கு அது இன்னும் வலுவடையவில்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச சேவையானது மக்களுக்குத் திறைசேரியின் வளங்களைச் சென்றடையச் செய்யும் முக்கிய பொறுப்பைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அதற்காக வலுவானதும் திறமையானதுமான அரச நிர்வாகக் கட்டமைப்பு அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இருப்பினும், அரச சேவையில் தொழில் வல்லுநர்களைத் தக்கவைத்துக்கொள்வதில் சவால்கள் காணப்படுவதாகவும், தொழில்முறைப் பதவிகளில் பல வெற்றிடங்கள் நிலவுகின்ற அதேவேளை, கீழ்மட்டப் பதவிகளில் அதிகளவான நியமனங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனைக் கருத்திற்கொண்டு, சில அரச நிறுவனங்களை மூடுவதுடன், சில நிறுவனங்களை ஒன்றிணைப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலும் கருத்துத் தெரிவித்த அவர், 2027ஆம் ஆண்டில் சம்பளத்தை அதிகரிப்பதற்கு 110 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனால், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
2028ஆம் ஆண்டில் அடிப்படைச் சம்பளத்தை அதிகரிப்பதற்குப் பதிலாக, அரச ஊழியர்களைச் சேவையில் தக்கவைத்துக்கொள்ள உதவும் அத்தியாவசியக் கொடுப்பனவுகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கால மாற்றத்திற்கேற்ப சில அரச நிறுவனங்களின் தேவைகள் குறைந்துள்ள நிலையில், குறிப்பிட்ட சேவைகளைத் தனியார் துறையிடமிருந்து பெற்றுக்கொள்வது பொருளாதார ரீதியாகப் பயனளிக்குமா என்பதையும் ஆராய வேண்டியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அரச சேவையைத் திறமையானதாகவும், தொழில் வல்லுநர்களைக் கவரக்கூடியதாகவும் மாற்றத் தவறினால், எதிர்காலத்தில் அரச நிர்வாகம் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.







