யாழ்ப்பாணம் நகரை அண்டிய பகுதிகளில் வன்முறைகளில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் இளைஞர் குழுவைச் சேர்ந்த ஆறு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதாகவும், அடாவடியாக மீற்றர் வட்டி வசூலித்ததாகவும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஊழியர்களை அச்சுறுத்தி QR முறைமையை மீறி எரிபொருள் நிரப்பிச் சென்றதாகவும் குறித்த குழுவினர் மீது பொலிஸாருக்குப் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவருக்கு எதிரான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள நிலையில், விசாரணைகளுக்கு ஆஜராகத் தவறியதால் அவர்களுக்கு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆறு பேரையும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, குறித்த குழுவின் தலைவரெனச் சந்தேகிக்கப்படும் நபர் உள்ளிட்ட ஒன்பது பேர் கடந்த மாதம் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பயணித்துக்கொண்டிருந்தபோது பெருந்தொகைப் பணத்துடன் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







