மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கனேசபுரம் விலினையடிச் சந்தியில் இன்று (10) காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார்.
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில், மண்டூர் 2ஆம் குறுக்கை சேர்ந்த 60 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான சாம்பசிவம் சதானந்தம் என்பவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மற்றொரு மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த கனேசபுரத்தைச் சேர்ந்த நபர் காயமடைந்த நிலையில் முதலில் மண்டூர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக தகவலறிந்த வெல்லாவெளி பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து, உயிரிழந்தவரின் சடலத்தை போரதீவுப்பற்று பிரதேச சபையின் அமரர் ஊர்தி மூலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







