மட்டக்களப்பு திருப்பெருந்துறை பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதியை தனக்குச் சொந்தமான காணி எனக் கூறி வேலி அமைக்க முயன்ற ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் இன்று (10) இடம்பெற்றது. இதனால் அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டதுடன், பின்னர் பொலிசாரும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.
பிரதேச மக்களின் தகவலின்படி, சம்பவம் இடம்பெற்ற காணி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இளைஞர்களால் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை அந்த காணிக்கு யாரும் உரிமை கோராத நிலையில், ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் காணியின் சுமார் 14 பேர்ச் பகுதியை உரிமையாளரிடமிருந்து வாங்கியுள்ளதாக தெரிவித்து, வேலி அமைக்கும் பணிகளை ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அப்பகுதி மக்கள் ஒன்றுகூடி வேலி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதுடன், காணி தொடர்பான உரிமை ஆவணங்கள் குறித்து கேள்வி எழுப்பினர். மேலும், இந்த காணி நீண்டகாலமாக பொதுப் பயன்பாட்டில் உள்ள விளையாட்டு மைதானம் என்றும், அதனை தனியார்மயப்படுத்தும் முயற்சியை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தனர்.
பிரதேச மக்களின் கூற்றுப்படி, இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரும் இதேபோன்ற முயற்சி இடம்பெற்றதாகவும், அப்போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், குறித்த காணியை விளையாட்டு மைதானமாக பயன்படுத்துவதற்கு பிரதேச செயலாளர் விளையாட்டுக் கழகத்திற்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும், காணி வாங்கியதாகக் கூறும் நபர் உண்மையான விற்பனையாளரின் விவரங்களை வெளியிடவில்லை என்றும் மக்கள் குற்றஞ்சாட்டினர்.
இதேவேளை, குறித்த ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி, இந்த காணி தனியாருக்குச் சொந்தமானது என்றும், அதற்கான உறுதிப்பத்திரம், படவரைவு உள்ளிட்ட அனைத்து சட்ட ஆவணங்களும் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், இது தனியார் காணி என்பதை உறுதிப்படுத்தும் எழுத்துமூலக் கடிதம் பிரதேச செயலாளரிடமிருந்து கிடைத்துள்ளதாகவும், அதன் பிரதிகளை கிராம அலுவலரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.















