தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்த அனைத்து கட்சிகளும் மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனின் 60 ஆவது பிறந்த நாள் மணிவிழா மலர் வெளியீட்டு விழா நேற்றுமுன்தினம் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இந்நிகழ்வில் கலந்து கொண்டிருப்பவர்கள் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளாவர். அதனை அவர்கள் யாரும் இல்லை என கூறவும்
முடியாது. எனவே அவர்கள் அனைவரும் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பாகவே இருக்க வேண்டும் என்பதை நான் விருப்புகின்றேன்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி உதயமான காலம் தொடக்கம், தந்தை செல்வா எல்லோரையும் அரவணைத்துச் சென்றார். பின்னர் தமிழர்களின் உரிமைக்காகப் போராடியவர், பிரிந்து நின்ற அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கி அதிலே தமிழ் மக்களின் உரிமைக்காக பிரதிநிதிகளை களமிறங்கச் செய்தார். ஆகவே நாங்கள் பிரிந்து செல்வது நல்ல விடயமாக தெரியவில்லை.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலே தனித்துச் சென்றிருக்கலாம். ஆனால் நாங்கள் எதையும் பேசித் தீர்மானிக்க முடியும். அந்த வீட்டின் கதவு திறந்துதான் இருக்கின்றது. தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜா, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் என அனைவரும் ஒற்றுமையாகச் செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். எனவே பிரிவினை வேண்டாம், ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என அவர் தெரிவித்தார்.