இந்தியாவில் கடமையாற்றி வரும் சுமார் 41 ராஜதந்திரிகளை எதிர்வரும் 10ம் திகதிக்கு முன்னதாக மீளவும் அழைத்துக் கொள்ளுமாறு இந்திய அரசாங்கம் கோரியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது .
இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையில் கடுமையான ராஜதந்திர முரண்பாட்டு நிலைமை நீடித்து வருகின்றது.
அண்மையில் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் 45 வயதான ஹார்தீப் சிங் நிஜார் என்ற மத தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த படுகொலை சம்பவத்தின் பின்னணியில் இந்திய முகவர்கள் இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டது.
கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவும் இந்த குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர முரண்பாட்டு நிலைமை உக்கிரமடைந்துள்ளது.
குறித்த ராஜதந்திரிகளை எதிர்வரும் 10ம் திகதிக்கு முன்னதாக அழைக்க தவறினால் அவர்களுக்கு ராஜதந்திர வரப்பிரசாதங்கள் தொடர்ந்தும் வழங்கப்படாது என இந்தியா எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் சுமார் 62 கனடிய ராஜதந்திரிகள் கடமையாற்றி வரும் நிலையில் இவர்களில் 41 பேரை மீளு அழைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே முக்கிய இந்திய ராஜதந்திரிகள் சிலரை கனடா திருப்பி அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.