பல்வேறு அரசாங்கங்களினால் ஆரம்பிக்கப்பட்டு அண்மையில் நிறுத்தப்பட்டுள்ள 98,000 வீடுகளின் நிர்மாணப் பணிகள் விரைவில் நிறைவடையும் என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியஆரச்சி தெரிவித்துள்ளார்.
அதற்கு 24,000 மில்லியன் ரூபா தேவைப்படும் என அவர் வலியுறுத்தினார். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைவாக நிர்மாணப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார்.
கடந்த அரசாங்கங்கள் ஆரம்பித்த திட்டங்களை நிறைவேற்றாமல் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் புதிய திட்டங்களை ஆரம்பித்ததால் அரைகுறையாக இருந்த 98,000 வீடுகள் தேசிய வீடமைப்பு அமைப்பில் சேர்க்கப்பட்டதாக தலைவர் மேலும் தெரிவித்தார்.
உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு நிட்டம்புவ ரன்பொகுனுகம வீட்டுத்திட்டத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் நேற்று (03) இடம்பெற்ற நடமாடும் சேவையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.