சிறுவர்களை யாசகத்துக்குப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான பொறிமுறையொன்றைப் பரிந்துரைப்பதற்கு விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான பொலிஸ் பிரிவு உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களை உள்ளடக்கிய இந்த விசேட குழுவை ஒருங்கிணைப்பதற்கான பணி தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு வழங்கப்பட்டது.
மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.
சிறுவர்களையும் பெண்களையும் வியாபார நோக்கத்திற்காக யாசகம் செய்வதற்குப் பயன்படுத்துவது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், சிறுவர்கள் யாசகத்துக்குப் பயன்படுத்தப்படுவது முற்றாகத் தடுக்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் வலியுறுத்தினார்.