மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவனையில் உள்ள பண்ணையாளர்களின் பிரச்சினைக்கு ஜனாதிபதியினால் தீர்வு காணப்படாதவிடத்து மட்டக்களப்புக்கு ஜனாதிபதி ரணில் வரும் போது எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட நாங்கள் தயார் என மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது குறித்து தொடர்ந்தும் சாணக்கியன் கருத்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் மட்டக்களப்புக்கு வர இருப்பதாக தெரியவருகிறது.
மட்டக்களப்பில் 22 நாட்கள் தொடர்ச்சியாக மயிலத்தமடு, மாதவனை பிரச்சனைக்கு பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பில் விசாரிக்க பொலிஸ் குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறுகின்றார்.
பொலிஸ் குழுவில் இருப்பவர்கள், பண்ணையாளர்களில் ஒருவரை அடித்து தாக்கிய பிக்கு தொடர்பில் விசாரணை செய்ய வரும்போது முதலாவதாக பிக்குவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு வந்தால் எப்படி அந்த பிக்குவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்.
பண்ணையாளர்களின் கோரிக்கையை நிவர்த்தி செய்வதாக ஜனாதிபதி தனது வாயாலேயே வாக்குறுதி தந்திருந்தாலும் கூட, வெளிப்பிரதேசத்தில் இருந்து வந்து பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரைகளில் விவசாயம் செய்ய முற்படுவோரை அகற்றும் வரை எங்களது போராட்டம் தொடரும்.
இந்த போராட்டத்தினை இன்னும் தீவிரமடையும் வரை ஜனாதிபதி வைத்திருந்தால் இதன் பின்விளைவுகளை ஜனாதிபதி மட்டக்களப்புக்கு வரும் போது பார்க்கக் கூடியதாக இருக்கும்.
இந்தப் பிரச்சினையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் ஜனாதிபதிக்கு எதிராக பாரிய போராட்டத்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம் நாட்டின் முதலாம் பிரஜைக்கு தர வேண்டிய கவனிப்பை நாங்கள் தருவதற்கு தயாராக இருக்கின்றோம் என சொல்லுமாறு அண்ணன் மனோ கணேசன் கூறியதையும் நான் இந்த இடத்தில் சொல்லிக் கொள்கின்றேன் என்றும் சாணக்கியன் இதன்போது கிண்டலாக தெரிவித்தார்.