2023 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான நேன்றைய போட்டியில் தென்னாபிரிக்கா அணி 102 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
டெல்லி அருண் ஜெட்லி சர்வதேச விளையாட்டுத் திடலில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்ற நிலையில், இலங்கை அணித் தலைவர் தசுன் சானக்க முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார்.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 428 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க அணி சார்பில் ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸென் 108 ஓட்டங்களையும் குயின்டன் டி காக் 100 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
அதேநேரம் உலக கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக சதமடித்தவராக தென்னாபிரிக்க அணியின் ஐடன் மார்க்ராம் பதிவாகியுள்ளார்.அவர் 49 பந்துகளில் சதம் கடந்த நிலையில், 106 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் டில்ஷான் மதுஷங்க 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பின்னர் 429 என்ற இமாலய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 44.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 326 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.
இலங்கை அணி சார்பில் அதிரடியாக ஆடிய குசல் மெண்டிஸ் 42 பந்துகளுக்கு 76 ஓட்டங்களை பெற்றதுடன் அதில் 8 ஆறு ஓட்டங்களும் அடங்கும்.
அத்துடன் சரித் அசலங்கா 79 ஓட்டங்களையும் அணியின் தலைவர் தசுன் ஷானக 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் ஜெரால்ட் கோட்ஸி 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.