மட்டக்களப்பு ஏறாவூர் பூர்வீக முஸ்லிம் பிரதேசத்திற்குள் வரும் புன்னக்குடா வீதி எனும் பொதுப் பெயரை சிங்களப் பெயராக மாற்ற கிழக்கு ஆளுநர் உத்தரவு வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், இதனை வன்மையாக கண்டிப்பதாகவும், அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சிங்களப் பெயர் மாற்றப்பட்ட அறிவித்தல் வெளியானதையடுத்து, ஏறாவூரில் பதற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
தொன்று தொட்டு “ஏறாவூர் புன்னக்குடா வீதி” என புழக்கத்திலிருந்து வரும் பெயரை “எல்விஸ் வல்கம” வீதி என சிங்களப் பெயராக மாற்றுவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் உத்தரவிட்டுள்ளமையானது பிரதேசத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஆளுநரின் உத்தரவு வெளியானதை அடுத்து ஏற்கெனவே ஏறாவூர் நகரை ஊடறுத்துச் செல்லும் கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் அறிவித்தலாக அமைக்கப்பட்டிருந்த புன்னக்குடா வீதி என்ற பெயர்ப் பலகை அகற்றப்பட்டிருக்கிறது.
இது தொடர்பில் நஸீர் அஹமட்டின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
ஏறாவூரில், பாரம்பரியமாக புன்னக்குடா வீதி என இருந்து வரும் பெயர் பலகை மாற்றம்பெறாது. பெயர் மாற்ற செயற்பாடுகளை உடன் நிறுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திடீர் பெயர்மாற்ற செயற்பாடானது கண்டிக்கத்தக்கதோடு ஆளுநரின் அதிகார எல்லையை மீறும் செயற்பாடாகும்.
இவ்வாறான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதை ஆளுநர் உடனடியாக நிறுத்த வேண்டும்” என்றும் அந்த ஊடக அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் ஏறாவூர் நகரிலிருந்து சுமார் 5.23 கிலோமீற்றர் தூரத்தில் புன்னக்குடாக் கடல் அமைந்திருக்கிறது.
இது வங்காளக் கடல் பகுதியாகும். ஆங்கிலேயர் காலத்திற்கு முன்பிருந்தே பூர்வீகமாக இந்த வீதி புன்னக்குடா வீதி என்றே அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. புன்னை மரங்கள் அங்கு அதிகமிருந்ததால் காரணப் பெயராகியுள்ளது.
ஏறாவூர் நகர பிரதேசம் நூறு சத வீதம் முஸ்லிம் சமூகத்தைக் கொண்டமைந்திருந்த போதும் கூட அந்த வீதிக்கு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பெயரைச் சூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
ஆனால், திடீரென தென்பகுதி காலிப் பிரதேச சிங்கள சமூகத்தைச் சேர்ந்த 9 பேர் ஆளுநருக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளனர். அதில் ஏறாவூர் புன்னக்குடா வீதிக்கு “எல்விஸ் வல்கம” என பெயர் மாற்றுமாறு கோரியுள்ளனர்.
அந்த வேண்டுகோளை உடனடியாக நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையில் ஆளுநர் இறங்கி உத்தரவையும் பிறப்பித்துள்ளார். அந்த வகையில், காலியின் பெருமைக்குரிய புதல்வன் என அழைக்கப்படும், காலியைச் சேர்ந்த சிங்கள சமூகத்தவர் 9 பேரும் விடுத்துள்ள வேண்டுகோளில் “காலி தல்பே கிராமத்தில் பிறந்து தனது 12வது வயதில் ஏறாவூருக்கு சென்று வாழ்ந்து அங்கே வர்த்தகம் செய்து நிலபுலன்களையும் வாங்கியதுடன் இன்னும் பல சேவைகளைச் செய்தார் எனத் தெரிவிக்கப்படும் “எல்விஸ் வல்கம” என்பரின் பெயரையே புதிதாக சூட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே அவரது பெயரை ஏறாவூர் புன்னக்குடா வீதிக்குச் சூட்ட உடன் நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரைக் கேட்டுக் கொள்கிறோம் என்று அந்த 9 பேராலும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
ஆளுநர், முன்னரே ஏறாவூர் பொதுச் சந்தையை “ஏறாவூர் சிங்களச் சந்தை” எனக் குறிப்பிட்டு ஏறாவூர் நகர சபைக்கு கடிதம் அனுப்பியிருந்ததும் அது ஆளுநரது உத்தியோகபூர்வ வலைத் தளத்தில் வெளியாகி பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியவுடன் ஆளுநர் அந்த வார்த்தைப் பிரயோகத்தை மாற்றிக் கொண்டார்.
மேலும் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத மாகாண சபை நிர்வாகக் காலத்திலும் உள்ளூராட்சி மன்ற நிர்வாகம் கலைக்கப்பட்டிருக்கும் தறுவாயிலும் சந்தர்ப்பத்தைப் பார்த்து கிழக்கு மாகாண ஆளுநரின் நடவடிக்கைககள், முற்றுமுழுவதுமாக சிங்கள பேரினவாத நடைமுறைப்படுத்தலை யைமப்படுத்தியதாக இடம்பெற்று வருவதாக அதிருப்தி தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர் கிழக்கு மாகாண ஆளுநர்களாக படை அதிகாரிகள் மற்றும் சிங்கள சமூகத்தைச் சேர்ந்தோரே நியமிக்கப்பட்டிருந்த போதும் தற்போதைய ஆளுநரைப் போன்று அவர்கள் நேரடியான சிங்கள மயமாக்கலை நோக்கி செயற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.