ஆப்பிள் நிறுவனம் எலக்ட்ரிக் கார் ஒன்றைத் தயாரித்து வருவது நமக்கு எல்லாம் தெரிந்த ஒரு விடயம் . இந்த கார் வரும் 2026ம்ஆண்டு தான் விற்பனைக்கு வரும் என்றும், இந்த காரின் விலை குறித்த சில தகவல்களும் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம்.
ஆப்பிள் நிறுவனம் செல்போன் மட்டுமல்ல, ஸ்மார்ட் வாட்ச், ஐபேடு, லேப்டாப் போன்ற தயாரிப்புகளையும் செய்து வருகின்றன. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிள் நிறுவனம் கார் தயாரிப்பில் களம் இறங்கியது. அதாவது முற்றிலுமாக தானியங்கியாக இயக்கும் திறன் கொண்ட காரை வடிவமைக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்து அதற்கான ஆய்வுகளை ஆரம்பித்தது.
சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய இந்த ஆய்வில் கடைசி தகவலாக இந்நிறுவனம் தயாரிக்கவுள்ள கார் வரும் 2025ம் ஆண்டு விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது காரை தயாரித்து விற்பனைக்குக் கொண்டுவருவது குறித்து ஆய்வுகளை நடத்தியது. அதன்படி முழுவதுமாக தானியங்கி காராக இதை வடிவமைக்க முடியாது என்பதை ஆப்பிள் நிறுவனம் தற்போது தான் புரிந்து கொண்டது. இதையடுத்து ஆப்பிள் நிறுவனம் தனது காரில் வழக்கமாக ஸ்டியரிங் மற்றும் மற்ற கார்களை போலவே டிரைவிங் விஷயங்களை வடிவமைக்கிறது. ஆனால் அதே நேரத்தில் இது தானியங்கி காராக அமையும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது இந்த காரில் ஹைவேயில் செல்லும் போது தாராளமாகத் தானியங்கி மோடை பயன்படுத்தலாம் என்றும், மற்ற நேரங்களில் மேனுவல் மோடில் காரை இயக்க முடியும். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மேனுவலாக காரின் கண்ட்ரோலை எடுக்க முடியும் என்ற ரீதியில் தயாரிக்க முடிவு செய்துள்ளது.
முழு தானியங்கி காரை தயாரிக்க முதலில் 1.2 லட்சம் அமெரிக்க டாலர் அளவிலான பணம் செலவாகும் எனத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது அது 1 லட்சம் அமெரிக்க டாலர் அதாவது இலங்கை மதிப்பில் 32352000.11 ரூபாய் என்ற மதிப்பில் தயாரித்து விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமல்ல தற்போது உள்ள புதிய மாற்றங்களுடன் காரை தயாரித்து விற்பனைக்குக் கொண்டு வரக் கொஞ்சம் காலம் செலவாகும் என்றே கருதப்படுகிறது. அதன்படி பார்த்தால் அந்நிறுவனம் ஏற்கனவே திட்டமிட்ட 2025ம் ஆண்டு அதன் காரை விற்பனைக்குக் கொண்டு வரமுடியாது. மாறாக 2026ம்ஆண்டு தான் இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் இந்த காருக்கு தற்போது டைட்டான் என்ற கோட்பெயரைவைத்துள்ளது. இந்நிறுவனம் இந்த காரின் வடிவமைப்பில் ஏராளமான மாற்றங்களைச் செய்து வருகிறது. 8 ஆண்டுகளாக இந்த காரை வடிவமைத்து வருகிறது. ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளில் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருப்பது இந்த ஆப்பிள் கார் தான். இதே போல ஆப்பிள் மிக்ஸடு ரியாலிட்டி ஹெட்செட்டும் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்தது. பலர் இதை வெறும் வதந்தி என்றே நம்பினர். ஆனால் ஆப்பிள் நிறுவனம் இந்த மிக்ஸடு ரியாலிட்டி ஹெட்செட்டை இந்த ஆண்டு 2023 வெளியிடவுள்ளது. ஆனால் இந்த ஆப்பிள் கார் திட்டம் மட்டும் தொடர்ந்து தாமதமாகிக்கொண்டே இருக்கிறது.
தற்போது கார் நிறுவனம் வாகனம் என்பதைத் தாண்டி ஒரு தொழிற்நுட்ப கருவியாகவும் மாறிவிட்டது. இதனால் தொழினுட்பத்தில் பெரிய நிறுவனங்களாக இயங்கிவரும் சோனி, ஷாவ்மி ஆகிய நிறுவனங்கள் கூட எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் களம் இறங்கத் தயாராகி வருகின்றனர். இதற்காக அவர்கள் பலமுயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் தற்போது உலக அரங்கில் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் எலான் மிஸ்கின் டெஸ்லா கார் நிறுவனம் முன்னணியில் திகழ்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.